ஆதிசேஷன், தனஞ்செய முனிவராக வந்து இத்தலத்து இறைவனை வழிபட்டதால் 'பாம்பணி' என்ற பெயர் பெற்றது. ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து வந்து இத்தலத்து இறைவனை வழிபட்டதால் 'திருப்பாதாளீச்சரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் 'நாகநாதர்' என்றும் 'சர்ப்பபுரீஸ்வரர்' என்றும் மிகப்பெரிய லிங்க மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். அம்பாள் 'அமிர்த நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். மேலும் பிரகாரத்தில் மூன்று விநாயகர் திருவுருவங்களும், சுப்ரமண்யர், பஞ்ச லிங்கங்கள், மஹாலஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, பைரவர், சூரியன், சந்திரன், நால்வர் சன்னதி, சனிபகவான் மற்றும் நவக்கிரகங்கள் தரிசனம் அளிக்கின்றனர். இக்கோயிலில் கோஷ்டத்தில் ஒரு (விஷ்ணு) துர்க்கையும், பிரகாரத்தில் ஒரு துர்க்கையும் என்று இரண்டு துர்க்கை அம்மன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 'சிம்ம தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும்போது மகாமகம் வரும். அதை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து காட்சி தருகின்றார்.
மூலவரின் மண்டபத்திற்கு முன் அவரை வழிபட்ட ஆதிசேஷனுக்கு 'தனஞ்ஜெயன்' என்னும் பெயருடன் தனி சன்னதி உள்ளது. ஆதிசேஷன் மனித முகமும், பாம்பு உடலும் கொண்டு தரிசனம் தருகின்றார். நடராஜர் சபையும் இங்கு அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|